Site icon Tamil News

2025ஆம் ஆண்டிற்குள் காசோலை பயன்பாட்டை நிறுத்தும் சிங்கப்பூர்

2025ஆம் ஆண்டிற்குள் காசோலைகள் பயன்படுத்துவது சிங்கப்பூரில் நிறுத்தப்படும் என அந்நாட்டின் நாணய சபை (Monetary Authority of Singapore) மற்றும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) என்பன தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் உள்ள பிரதான வங்கிகளான சிட்டி பேங்க், டிபிஎஸ் வங்கி, எச்எஸ்பிசி, மேபேங்க், ஓசிபிசி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி மற்றும் யுஓபி ஆகியன நவம்பர் முதலாம் திகதி முதல் காசோலைகளுக்கு சிங்கப்பூர் டொலர் பெறுமதிமிக்க கட்டணத்தை தனிநபர்களிடமிருந்து அறவிட உள்ளது.

அதேபோல் பிற வங்கிகளும் இந்த முறைமையை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் என சிங்கப்பூர் நாணய சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டிபிஎஸ் வங்கியின் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கையில்,

“காசோலைப் பயன்பாடு குறைந்து வருவதால், காசோலைகளைக் கையாள்வதில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. அதேபோல் கடந்த ஆறு வருடங்களில் காசோலை பயன்பாடு 70 வீதமாக குறைந்துள்ளது.

இது 2016 இல் 61 மில்லியனிலிருந்து 2022 இல் 19 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது.

அதற்கேற்ப, 2016 முதல் 2021 ஆம் ஆண்டில் காசோலையை பரிமாற்றுவதற்கான சராசரி செலவு நான்கு மடங்காக உயர்ந்தது. இந்நிலையில் காசோலையின் பாவனை மேலும் குறையும் பட்சத்தில் அந்த செலவு 2025 இற்குள் மேலும் அதிகரிக்கும்“ என தெரிவித்தார்.

இதேவேளை, 95 வீதத்திற்கும் அதிகமான நிதி பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. காசோலைகளின் பயன்பாடு 2 வீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.

எனவேதான் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாணய சபை (Monetary Authority of Singapore) மற்றும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) என்பன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version