Tamil News

ஆரத்தில் எடுத்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் புகழுடல்!

மறைந்த சாந்தனின் உடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் அமைந்துள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய் பல ஆண்டுகளுக்கு பின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதுள்ளார்.

சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தில் எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.

அவரது பூதவுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவில்லுக்கு மக்கள் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

Exit mobile version