Tamil News

ஷங்ரி-லா மாநாடு : அமெரிக்க – சீன பாதுகாப்புத் தலைவர்கள் முதல்முறை சந்திப்பு

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரி-லா வட்டாரத் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க – சீன தற்காப்புத் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது 18 மாதங்களில் இது முதல் முறை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புவிசார் அரசியல் பதற்றம் ஏற்பட காரணமாக இருந்த, தைவான் அருகே சீனா போர்க் கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பிய சம்பவத்திற்கு சில நாள்களுக்குப் பிறகு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ஐந்து மாதங்களுக்கு முன்னர் சீன தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட டோங் ஜுன் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு (மே 31) தொடங்கவுள்ள ஷங்ரி-லா மாநாட்டுக்கு முன்னதாக, ஷாங்ரி லா ஹோட்டலில் பிற்பகல் 12.50 மணிக்குச் சந்தித்தனர்.

தைவான் விவகாரம் உள்ளிட்ட பதற்றமான பிரச்சினைகள் தொடர்பான சர்ச்சைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க உதவும் ராணுவ உரையாடல்களுக்கான நம்பிக்கையை சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.இருவரும் ஏப்ரல் மாதம் தொலைபேசியில் பேசினர். அப்போது தென்சீனக் கடல் பகுதி, தைவான் நீரிணை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2023 நவம்பர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் ராணுவத் தகவல்தொடர்பை மீண்டும் தொடங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மே 31 ஆம் திகதி சிங்கப்பூரில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றதால் இரு நாடுகளுக்கிடையிலான ராணுவத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தேவையற்ற மோதல்களைத் தடுக்க மூத்த ராணுவத் தலைவர்களுக்கிடையிலான தொடர்பின் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.ஆனால், டிக் டாக் செயலி தடை, ரஷ்ய உக்ரேன் போர், மின் வாகன ஏற்றுமதி போன்ற பல கருத்துவேறுபாடுகளால், இவ்விரு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஆட்டம் கண்டுள்ளன.

Exit mobile version