Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரிப்பு

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல கட்டுமான நிறுவனங்கள் இது தொடர்பில் புலம்புகின்றன. சில தங்கும் விடுதிகள் வாடகையை இரண்டு மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கூறியுள்ளன.

பெரிய நிறுவனங்கள் சொந்தமாக தற்காலிக தங்குமிடங்களை அமைத்து தங்களிடம் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் தீர்வுகளைக் கண்டறிய சிரமப்படுவதாகவும் கூறியுள்ளன.

சேனல் 8 செய்திக்கு பேட்டியளித்த ஒரு கட்டுமான நிறுவனம்; 20 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளதாகவும், அவர்கள் எட்டு ஆண்டுகளாக தங்கும் விடுதிகளில் வசித்து வருவதாகவும் சொன்னது.

இந்நிலையில், வாடகைகள் கடுமையாக அதிகரித்ததை அடுத்து , அவர்கள் அந்த ஊழியர்களை மலிவான அபார்ட்மெண்ட் தங்குமிடங்களுக்கு மாற்ற முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் ப்ராஜெக்ட் திட்டங்களை கூறிய திகதியில் முடித்து கொடுக்க வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியமானவர்கள் என்று சுட்டிக்காட்டிய நிறுவன இயக்குனர், அவர்களுக்கு முறையான தங்கும் வசதியை அமைத்து கொடுக்க முடியாவிட்டால் நிறுவனத்தையே மூடும் அபாயம் கூட உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த தங்குமிட சிக்கல்கள் காரணமாக, சில நிறுவனங்கள் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு கொண்டு வரும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version