Tamil News

வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகளை சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய தினம்(08) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நியூஸ்லாந்து தூதரகம், பிரித்தானிய தூதரகம், நெதர்லாந்து தூதரகம், அவுஸ்ரேலியா தூதரக அதிகாரிகளை சந்தித்தோம்.

எமது உறவுகளுக்கான சர்வதேச நீதி பொறிமுறையினை அவர்களிடம் கேட்டிருந்தோம். அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம், ரி.ஆர்.சி அலுவலகத்தில் எமக்கு உடன்பாடு ஏன் இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்

நாங்கள் நீண்ட காலமாக போராடி வருவதால் எமக்கான அச்சுறுத்தல்களையும், அடக்கு முறைகளும் எவ்வாறு இருக்கிறது என்ற உண்மை நிலவரத்தையும் எடுத்து கூறியிருந்தோம்

எமக்கான ஒரு நீதிப்பொறிமுறையை பெற்றுத் தரும்படியும் எமது உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்காமையால் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான ஆதரவினை சகல நாடுகளும் தர வேண்டும் என கோரியிருந்தோம்.

நாங்கள் உரிமைகளை இழந்து இங்கு செயற்படுகின்றோம் எமது உரிமைகளை பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் நாம் ஒரு இனமாக வாழ வேண்டும் என்பதற்காக இன்று அவர்களிடம் எமது கலந்துரையாடலை மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version