Site icon Tamil News

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு செல்ல தயார்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்ளுர் விசாரணைக்கு அன்றி சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07.09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு காணொளி அறிக்கைகளை முன்வைப்பார்கள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சனல் 4 புலம்பெயர் மக்களுக்கு ஆதரவான அலைவரிசை என்றும், ஆனால் அவை ஒளிபரப்புச் செய்வதால் ஏதேனும் சம்பவம் நடந்திருந்தால் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் தெரிவத்த அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, ​​முன்னாள் அரசுப் பேச்சாளர் உள்ளிட்டோர் என் மீது குற்றம்சாட்டினர்.

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக தெரிவித்தனர். இன்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகின்றனர். அன்று நான் அந்த அறிக்கையை வெளியிட்ட போது இன்று பேசுபவர்களும் கூச்சல் போடுபவர்களும் அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் இருந்தவர்கள்தான்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அரசாங்கம் என்ற ரீதியில் இந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version