Site icon Tamil News

சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21.08) அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தில் ,  ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பை சந்திக்கவுள்ளார். அத்துடன்  சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல அரசாங்க அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் கார்பன் நடுநிலைமை தொடர்பான இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி நாட்டில் இல்லாத இந்த இவ்விரு நாட்களிலும்,  ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்  கனக ஹேரத், பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக  அனுப பாஸ்குவால், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version