Site icon Tamil News

ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி போரில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 7ம் திகதி இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடரும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக, வடக்கு காஸாவை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். காஸாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

இதனால் அகதிகளாக மக்கள் அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு நேரில் சென்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் ஹமாஸைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் போரை தொடங்குவதற்கு காரணமான ஹமாஸ் ஆயுதப் பிரிவின் ராணுவ தளபதி உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீன சட்டசபையின் உறுப்பினர் ஆன இவர் ஹமாஸின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவியும் ஆவார்.

ஹமாஸ் வானொலியை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் அவர் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளன.

Exit mobile version