Site icon Tamil News

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்!! ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

இலங்கையை புத்திசாலி நாடாகக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பிற்கு அமைவாக அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும்.

இந்த மாநாட்டில் திருத்தப்பட்ட கட்சியின் புதிய அரசியலமைப்புச் சட்டமும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. .

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புத்திசாலித்தனமான நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டிற்காக பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு புத்திசாலித்தனமான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டிற்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Exit mobile version