Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல் – தமிழ் தரப்பின் பொது வேட்பாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

அத்தோடு பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான கலந்துரையாடல் தமிழ் பொது கட்டமைப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சி உறுப்பினருமான பா.அரியநேத்திரனை முன்னிறுத்துவதென உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version