Site icon Tamil News

இராணுவத் தளபதியின் சேவை நீடிப்பை இரத்து செய்த ஜனாதிபதி

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவுக்கு வழங்கப்படவிருந்த சேவை நீடிப்பு ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி 55 வயதை பூர்த்தி செய்யவுள்ள மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க ஓய்வு பெற உள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் அவருக்கு வழங்கப்படவிருந்த சேவை நீடிப்பு தொடர்பான ஆவணங்கள் உரிய முறைமையின்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவாக, இவ்வாறான சேவை நீடிப்பு தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதிக்கு தனித்தனியாக அனுப்பப்படும், ஆனால் இராணுவத் தளபதி சஞ்சய் வனசிங்கவுக்கு சேவை நீடிப்பது தொடர்பான ஆவணத்தை பாதுகாப்பு அமைச்சு மேலும் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, குறித்த ஆவணத்தில் இரண்டாவது இடத்தில் இராணுவ தளபதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட இராணுவ வரலாற்றில் பல முன்னாள் படைத் தளபதிகளின் சேவையை நீடிக்க அரசாங்கங்கள் செயற்பட்டன.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி மற்றுமொரு இணையத்தளம், மரபுக்கு புறம்பாக தவறான செயற்பாடுகளை தொடர்வதற்கு ஜனாதிபதி தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

 

Exit mobile version