Site icon Tamil News

ஆங் சான் சூச்சியை விடுவிக்கும்படி போப் ஃபிரான்சிஸ் கோரிக்கை

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியை விடுவிக்குப்ம்படி போப் ஃபிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.சூச்சிக்கு வத்திகனில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கவும் அவர் முன்வந்துள்ளார்.

ஆசியாவிலுள்ள இயேசு சங்கத்தினருடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் போப் இவ்வாறு கூறினார்.

“சூச்சியின் விடுதலைக்குக் கோரிக்கை வைத்தேன். அவரது மகனை ரோமில் சந்தித்தேன். சூச்சியை வத்திகனில் வரவேற்கவும் அழைப்பு விடுத்துள்ளேன்,” என்று தமது 12 நாள் தென்கிழக்காசியப் பயணத்தின்போது நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலில் போப் தெரிவித்தார்.

87 வயதாகும் போப் ஃபிரான்சிஸ், 2017ஆம் ஆண்டு டிசம்பரில் மியன்மார் சென்றிருந்தார்.

சூச்சி குறித்து போப் கூறிய தகவல்களை, ரோமைச் சேர்ந்த இயேசு சங்கத் தலைவரான தந்தை அன்டோனியோ ஸ்படாரோ தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இத்தாலிய நாளேடு ஒன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அதை வெளியிட்டுள்ளது.

மியன்மாரின் ராணுவ அரசாங்கம் எதிர்ப்புக் குரல் எழுப்புவோரைக் கொலை செய்வது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

ராணுவம் 2021ஆம் ஆண்டு நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, 78 வயதாகும் சூச்சியைத் தடுத்துவைத்துள்ளது. அவருக்கு தேச துரோகம், கையூட்டு பெற்றது உள்ளிட்ட குற்றங்களின் தொடர்பில் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Exit mobile version