Site icon Tamil News

டெல்லியில் விவசாயிகள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு

தில்லி-அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் தில்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

அதன்படி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லிக்கு படையெடுத்து வருகின்றனர்.

பஞ்சாப் விவசாயிகள் 10 ஆயிரம் டிராக்டர்களில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த பேரணியால் தில்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தில்லி செல்வதைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தில்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல்களையும் எதிர்கொண்ட படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி நோக்கி முன்னேறி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Exit mobile version