Site icon Tamil News

கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவுக்கு பிரதமர் மோடி பயணம் : வெளியான அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்,

அங்கு அவர் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வைக்கவுள்ளார்.

அதன்படி, வரும் 27 ஆம் திகதி மதியம் 1.20 மணிக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர், மதியம் 2 மணி அளவில் கோவை சூலூர் வந்தடைகிறார். அங்கிருந்து மதியம் 2.10 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.

மதியம் 2.45 முதல் 3.45 வரை என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியை முடித்து விட்டு, பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணி அளவில் மதுரை சென்றடைகிறார்.

மதுரையில் மாலை 5.15 முதல் 6.15 மணி வரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இதனையடுத்து மாலை 6.45 அளவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்லும் பிரதமர், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

மறுநாள் காலை 8.15 மணி அளவில் நட்சத்திர விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் 9 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி சென்றடைகிறார்.

பின்னர், 9.45 முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10 மணிக்கு பிரதமர் மோடி திருநெல்வேலி செல்கிறார்.

அங்கு, மதியம் 12.15 மணி வரை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கேரளா செல்கிறார்.

 

 

 

Exit mobile version