Site icon Tamil News

தாய்லாந்தில் விபத்துக்குள்ளான சீன பிரஜைகளுடன் சென்ற விமானம் – மீட்கப்பட்ட சில உடல் பாகங்கள்!

பேங்காக்கின் தென்கிழக்கில் விமானம் விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஒன்பது பேரும் உயிர் பிழைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதபோதும், மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) தாய்லாந்துக் காட்டில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) சாச்சோங்சாவ் மாகாணத்தின் காட்டில் விமானம் விழுந்தது. அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு விமானிகள், ஏழு பயணிகள் உட்பட ஒன்பது பேர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து வளைகுடாவில் உள்ள கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற டிராட் மாகாணத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்தது.

“கிட்டத்தட்ட 3.10 மணிக்கு விபத்து நடந்தது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அனைவரும் இறந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று சாச்சோங்சாவ் ஆளுநர் சோன்லேடி யாங்ட்ராங் ஆகஸ்ட் 22 அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

உள்ளூர் ஊடகச் செய்திகளின்படி, பயணிகளில் நான்கு தாய்லாந்து நாட்டவர்களும் 12, 13 வயதுகளுடைய இரு குழந்தைகள் உட்பட ஐந்து சீனர்களும் அடங்குவர்.

300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் தொண்டூழியர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சில உடல் பாகங்களும் விமானத்தின் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கனமழை காரணமாக தேடுதல் பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version