Tamil News

இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி… தடை விதித்த சிங்கப்பூர்!

இந்திய தயாரிப்பான எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதித்து, திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது சிங்கப்பூர் தேசம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர், கோலா பானங்கள் முதல் பல்வேறு ரகத்திலான உணவுப்பொருட்கள் வரை பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக புகார்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய தயாரிப்பான பிரபல மசாலா நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூரில் அதற்கு தடை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்றைய தினம் சிங்கப்பூரில் வெளியான அறிக்கை, ’இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசாலா தயாரிப்பு நிறுவனமான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்னும் பூச்சிக்கொல்லி மனித நுகர்வுக்குப் பொருந்தாத அளவில் இருப்பதை சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு ஏஜென்சி கண்டறிந்துள்ளது.

Singapore recalls Everest fish curry masala alleging pesticide presence:  'Levels exceed limits' - Hindustan Times

“சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதால், சிங்கப்பூர் உணவு நிறுவனம் இறக்குமதியாளரான எஸ்பி முத்தையா & சன்ஸ் நிறுவனத்தை தனது தயாரிப்புகளைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்தை எந்த வகையிலும் உணவில் பயன்படுத்த அனுமதி இல்லை என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களின் மீதான நுண்ணுயிர் தாக்கத்தை தடுக்க ரசாயன கலவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனினும் சிங்கப்பூர் சட்டங்களின்படி, உணவுப்பொருட்களில் இவற்றின் சேர்க்கை தடை செய்யப்பட்டிப்பதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

எத்திலீன் ஆக்சைடை உட்கொள்வது நீடித்த காலத்துக்கான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில், அவர்களது பயன்பாட்டுக்கான, இந்தியாவில் தயாரான மசாலா தயாரிப்பு ஒன்று தடை செய்யப்பட்டிருப்பதும், திரும்பப்பெற உத்தரவிடப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version