Site icon Tamil News

செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வத்தை இழந்த மக்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதன் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை இழந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தவர்களும் தற்போது பயன்படுத்துவதில்லை என்றும், ChatGPT, Copilot மற்றும் ஜெமினி போன்ற AI கருவிகளை தற்போது ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த உண்மையை தெரிந்துகொள்ள ரைட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 12000 பேரிடம் செய்த ஆய்வில், இளைஞர்கள் இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் டென்மார்க், அர்ஜென்டினா, ஜப்பான், பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இணையம் வழியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி, பிரிட்டிஷ் மக்களில் வெறும் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே செயற்கை நுண்ணறிவு கருவிகளை தினசரி பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலமாக ஏஐ தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தை மக்கள் இழந்துவிட்டார்கள் என்பது உறுதியாகிறது.

மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஏஐ தொழில்நுட்பம் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துமா அல்லது மோசமாக்குமா என கேட்டபோது, பலர் தங்களின் அதிருப்தி மனநிலையையே வெளிப்படுத்தினர்.

தொடக்கத்தில் ஏஐ பற்றிய பரபரப்புக்கு மத்தியில் மக்கள் இதை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் இப்போது இதன் மீதான ஆர்வம் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று பதில் கூறியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பல முன்னேற்றங்களைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு சாதிக்கும் என்பது டெக் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version