Site icon Tamil News

வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்… சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்

சுவட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

‘சர்கோ கேப்ஸ்யூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் உள்ளே படுத்துக்கொண்டு, ஒரு பட்டனை அழுத்தினால், உள்ளிருக்கும் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்சிஜன் வாயுவுக்குப் பதிலாக, நைட்ரஜன் வாயு நிரம்பி, உடலில் ’ஹைபோக்சியா’ பாதிப்பு ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும் என இதனை வடிவமைத்த ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.

இறக்க விரும்பும் நபர், முதலில் அதற்கான மனதிடம் பற்றிய ஒரு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என அந்த நாட்டின் சட்டம் கூறுகிறது. தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்த அதனுள்ளே படுத்து கதவை மூட வேண்டும். பின் அவர் யார், எங்கிருந்து வருகிறார், பட்டனை அழுத்தினால் என்ன ஆகப் போகிறது தெரியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பின்னர், ‘நீங்கள் இறக்க விரும்பினால் இந்த பட்டனை அழுத்தவும்’ என்ற கட்டளை வந்தவுடன் உள்ளிருக்கும் நபர் அதனை அழுத்த வேண்டும். பின் இருமுறை காற்றை சுவாசித்ததும் அவர்கள் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மயக்க நிலைக்குச் சென்று சிறிது மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து 5 நிமிடங்களுக்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள்.

ஒருமுறை பட்டனை அழுத்தினால் 30 நொடிகளுக்குள் 21%-ல் இருந்து 0.05%-க்கு ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். சார்கோவில் உள்ள கணினியில் உள்ளிருக்கும் நபரின் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு அளவு, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும். என்றாலும், மரண தண்டனைகளுக்கு இந்த இயந்திரம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு 20 டொலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மருத்துவர்கள் உதவியின்றி கருணைக் கொலைகளை செய்ய முயற்சிப்பதாகச் சொல்லும் இந்த நிறுவனம், ஒரு ஆண்டுகாலமாக இந்த இயந்திரத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில், மனிதர்களோ, விலங்குகளோ சோதனைக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தை உருவாக்க 650000 யூரோக்கள் செலவானதாகவும், நெதர்லாந்தில் 12 ஆண்டுகளாக இதனை ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version