Site icon Tamil News

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் செல்பி எடுக்க அனைவருக்கு இலவச கையடக்க தொலைபேசிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்ற பின் செல்பி எடுக்க, அதில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இலவச கையடக்க தொலைபேசி வழங்க சாம்சங் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக அந்நிறுவனம் தயாரித்துள்ள Galaxy Z Flip6 கையடக்க தொலைபேசி இவ்வாறு வழங்கப்படுவதால், வரலாற்றில் முதல்முறையாக இது போன்ற தனித்துவமான அனுபவத்தை போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெற்றிபெறும் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய முக்கிய தருணங்களை கவனத்தில் கொள்வதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும் என தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக விருது மேடையில் செல்பி எடுப்பது விளையாட்டு வீரர்களின் சமூக வலைதளங்களில் புரட்சியை ஏற்படுத்தும் என சாம்சங் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு சமீபத்திய கேலக்ஸி கையடக்க தொலைபேசி வழங்குவது பெருமையாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கையடக்க தொலைபேசி AI தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version