Site icon Tamil News

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பு

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனத்தின் யோசனைக்கு அமைய, இந்தியாவின் நாகப்பட்டினம் – திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் , பெட்ரோலிய கூட்டுத்தாபனம் , பெட்ரோலிய களஞ்சிய முனைய நிறுவனம், பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

எரிவாயு மற்றும் பெட்ரோலியத்திற்காக இரண்டு குழாய்களை அமைத்து, இரு நாடுகளையும் இணைக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு இதன்போது கோரிக்கை விடுத்ததாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

இந்த எண்ணெய் தாங்கி தொகுதியை இந்தியன் ஒயில் நிறுவனம் கூட்டு தொழில் முயற்சியாக தற்போது மேம்படுத்தி வருவதுடன், எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோலிய ஆய்விற்கான மத்திய நிலையமாக திருகோணமலையை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்குமிடையிலான மின்சக்தி மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

Exit mobile version