Site icon Tamil News

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துகொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரபல ரவுடிகளில் ஒருவரான சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் பாஜக தலைவர் பிராம் தத் திவேதி கொலை வழக்கிலும் சஞ்சீவ் ஜீவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறையில் இருந்த சஞ்சீவ் ஜீவா, வழக்கு விசாரணைக்காக லக்னோ சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸாரைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து லக்னோ மேற்கு துணை காவல் ஆணையர், லக்னோ மத்தி துணை காவல் ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் உபேந்திர குமார் அகர்வால், “குற்றவாளி சஞ்சீவ் குமார் சுடப்பட்டுள்ளார். மேலும், அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த 2 காவல் துறை அதிகாரிகளும், ஒரு குழந்தையும் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version