Site icon Tamil News

கிழக்கு கடற்பகுதியில் இருந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசிய வடகொரியா… அதிர்ச்சியில் உறைந்த தென்கொரியா!

வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இன்று திடீரென கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ச்சியாக ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தனது கிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து தொடர்ச்சியாக பல ஏவுகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இதனை அதன் அண்டை நாடான தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில் அமெரிக்க – தென்கொரிய கூட்டு விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை 9 மணியளவில் வொன்சானின் வடகிழக்கு பகுதியில் பல அறியப்படாத கப்பல் ஏவுகணைகளை எங்கள் ராணுவம் கண்டறிந்தது.

இதுதொடர்பாக தென் கொரியா-அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடகொரியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாரத்தில், ஒரே நேரத்தில் பல ராக்கெட் ஏவுகணைகளுக்கான புதிய கட்டுப்பாட்டு அமைப்பை சோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்தது, இந்த கட்டுப்பாட்டு அமைப்பானது போர் திறனை அதிகரித்துள்ளது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

தென் கொரியாவை தனது நாட்டின் பிரதான எதிரி என ஏற்கெனவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். தனது நாட்டின் எல்லையில் ஒரு அங்குலம் மீறப்பட்டால் கூட போர் மூளும் என கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பு சோதனை மற்றும் திட எரிபொருள் கொண்ட ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசுவது உள்ளிட்ட ஆயுத சோதனைகளையும் வடகொரியா அதிகரித்து வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்த, ஆயுதங்களை வடகொரியா தயார் செய்து அனுப்பவதாகவும், இதனைச் சோதிப்பதற்காகவே தற்போது கப்பல் ஏவுகணைகளை தனது கடற்பகுதியில் வீசியுள்ளதாகவும் தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவும், ரஷ்யாவும் சமீப காலமாக தங்களிடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளன. கிம் ஜாங் உன் கடந்த செப்டம்பரில் ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து வந்தார்.
வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் திட்டத்துக்கு ரஷ்யா தொழில்நுட்ப உதவியை வழங்கியதாகவும், இதற்கு ஈடாக வட கொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதாகவும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version