Site icon Tamil News

தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றால் மீண்டும் அணுவாயுதப் பேச்சைத் தொடங்க வடகொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றால் வடகொரியா அமெரிக்காவுடனான அணுவாயுதப் பேச்சை மீண்டும் தொடங்கத் திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பேர்ப்பேச்சுக்கான உத்தியை அது வகுத்து வருவதாக, அண்மையில் தென்கொரியாவுக்குத் தப்பிச்சென்ற வடகொரியாவின் முன்னாள் மூத்த அரசதந்திரி ரி இல் கியூ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கியூபாவிலிருந்து அவர் தப்பிச்சென்றது ஜூலை மாதம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்தது.2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியாவில் உயர் பதவி வகித்த அரசதந்திரி ஒருவர் தென்கொரியாவிற்குத் தப்பிச் சென்றது அதுவே முதல்முறை.

அனைத்துலக ஊடகத்திற்கு அளித்த முதல் நேர்காணலில் ரி, 2024ஆம் ஆண்டும் அதற்கு அப்பாலும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை வடகொரியா அதன் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைப் பட்டியலில் முன்னிலையில் வைத்திருப்பதாகக் கூறினார்.

ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்தும் அதேவேளையில், டிரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபரானால் வாஷிங்டனுடன் அணுவாயுத பேரப்பேச்சை மீண்டும் தொடங்க பியோங்யாங் ஆர்வம் கொண்டுள்ளதாகத் ரி குறிப்பிட்டார்.

ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்குதல், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கம் என்ற அறிவிப்பை நீக்குதல், பொருளியல் உதவி போன்றவற்றை இலக்காகக் கொண்டு அதற்கான உத்தியை வடகொரிய அரசதந்திரிகள் வகுத்ததாக அவர் சொன்னார்.

வடகொரியா அண்மையில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் சாத்தியத்தை நிராகரித்தும் போர் குறித்த எச்சரிக்கை விடுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளது. பியோங்யாங்கின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரக்கூடும் என்பதைத் ரியின் தகவல்கள் காட்டுகின்றன.

முன்னதாக, 2019ஆம் ஆண்டு வியட்னாமில் கிம்மும் டிரம்ப்பும் நடத்திய சந்திப்பு பலனளிக்கவில்லை. கிம் அனுபவமற்ற ராணுவத் தளபதிகள் மேல் நம்பிக்கை வைத்தது அதற்குக் காரணம் என்றார் ரி.

“கிம் ஜோங் உன்னுக்கு அனைத்துலக உறவுகள், அரசதந்திரம், உத்திபூர்வமான முடிவெடுத்தல் குறித்து அதிகம் தெரியவில்லை,” என்றார் அவர்.“இம்முறை வெளியுறவு அமைச்சு கூடுதல் அதிகாரத்துடன் இதற்குப் பொறுப்பேற்கும். எதுவுமே தராமல் வடகொரியாவின் கை, கால்களைக் கட்டிப்போடுவதுபோல் நான்கு ஆண்டுகளுக்கு முடக்குவது திரு டிரம்ப்புக்கு அவ்வளவு எளிதாக இருக்காது,” என்று திரு ரி கூறினார்.

Exit mobile version