Site icon Tamil News

ரணிலுக்கு ஆதரவில்லை – மொட்டுக் கட்சி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  ஆதரிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் அங்கு மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், இதுவரை பல பெயர்கள் பேசப்பட்டுள்ளதாகவும் சாகர காரியவசம் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் 82 உறுப்பினர்களில் 79 பேர் கலந்து கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்கும் யோசனைக்கு 11 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வேட்பாளருக்கு வெளியில் ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரேரணைக்கு 06 பேர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version