Site icon Tamil News

இலங்கை : கொழும்பில் வாழும் வீடற்றவர்களுக்கு புதிய வீடுகள் : ரணில் உறுதி!

கொழும்பு காஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வீடமைப்புகளை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு கஜிமா தோட்ட வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06.03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகளை ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்படும் அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு இன்னும் அதிகமான வீட்டுத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

Exit mobile version