Site icon Tamil News

ISIS சந்தேகநபர்களுடன் கொழும்பில் உள்ள நாட்டாமைக்கு தொடர்பு

இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவின் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, இந்த விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் கைதான சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில், சந்தேகநபர் ஒருவரை பாதுகாப்பு பிரிவினர் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சந்தேகநபரின் புகைப்படத்தை பாதுகாப்பு பிரிவு இன்று (25) வெளியிட்டது.

தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்ற நபரின் படத்தையே பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் பட்சத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் (071-8591753) அல்லது நிலைய பொறுப்பதிகாரி (071-8591774) ஆகியோரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்குபவரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் உறுதி வழங்கியுள்ளது.

நாட்டாமை வேலை செய்த ISIS சந்தேகநபர்

இந்தியாவின் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினால், இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பில் நாட்டாமை (மூட்டைத்தூக்கும் தொழில்) தொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் கடந்த 23ஆம் திகதி பிரவேசித்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டதுடன், பின்னர் விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளில் ஒருவர், அஹமதாபாத்தில் கைதாவதற்கு முதல் நாள், குறித்த நபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையும் தெரிய வந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் சந்தேகநபரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைதானவர்களை ஏற்கனவே புனர்வாழ்வளிக்க பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ISIS பயங்கரவாதிகளின் பெயர்களும், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது.

நான்கு பேருக்கும் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

நன்றி – TrueCeylon

Exit mobile version