Site icon Tamil News

மியன்மாரில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டு போர் – முக்கிய நகரை கைப்பற்றிய ஆயுதக்குழு

மியான்மாரில் அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது.

மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மூன்று முக்கிய அமைப்புகள் அடங்கிய இந்த ஆயுதம் ஏந்திய குழு, ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. பல முக்கிய நகரங்களை இந்த ஆயுதக் குழு கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே, சீனாவை ஒட்டியுள்ள லாக்காயிங் என்ற முக்கிய நகரை, ஆயுதக் குழு நேற்று கைப்பற்றியுள்ளது. கடந்த பல வாரங்களாக கடுமையான சண்டை நடந்த நிலையில், ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தது.

மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீனா, அதே நேரத்தில் இந்த ஆயுதக் குழுவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த ஆயுதக் குழுவில் இடம்பெற்ற மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி படையில், சீன பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.

போரை நிறுத்தி, அமைதி பேச்சு நடத்தும்படி சீனா தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில், அதன் எல்லையை ஒட்டியுள்ள லாக்காயிங் பகுதியை, பழங்குடியின ஆயுதப் படை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Exit mobile version