Site icon Tamil News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் அமைச்சர்கள் எடுத்த தீர்மானம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவர் வசித்த கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் உள்ள வீட்டை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் வழங்குவதற்கு அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, 2019 அக்டோபர் 15ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுக் கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள் சபையின் தலைவராக செயற்படும்  மைத்திரிபால சிறிசேன தமக்கு உரிய சலுகைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு மக்களின் நம்பிக்கையை மீறியுள்ளதாகவும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி பிரியந்த ஜயவர்தன, பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையின் தலைவராக தாம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அங்கீகாரம் வழங்கியமை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்தார்.

அத்துடன்  முன்னாள் ஜனாதிபதி  சிறிசேன ஓய்வுபெறுவதற்கு முன்னதாகவே தனக்கு சொந்தமான வீட்டை அமைச்சர்கள் சபையின் ஊடாக முன்பதிவு செய்வது சட்டத்திற்கு முரணானது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை எடுத்த இந்த முடிவு அரசாங்கத்தின் கொள்கை முடிவு என சுட்டிக்காட்டிய நீதிபதி, இதில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்த நீதியரசர் குழு அதனை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version