Site icon Tamil News

“அத்திப்பட்டியை போல மன்னார் தீவு மாயமாகும்”- வினோ நோகராதலிங்கம் MP குற்றச்சாட்டு

நடிகர் அஜித் நடித்த தென்னிந்திய திரைப்படமான ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும்.அதேபோன்றே இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டினார்.

அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் வேலைகளையே அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனமும் அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் சுற்றாடல்துறை அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை செய்துகொண்டிருக்கின்றது. மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக,அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின்,அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சிப்பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது. இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமை, அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Exit mobile version