Tamil News

சீனாவின் உளவுக் கப்பலுக்கு மாலதீவு வரவேற்பு … இந்தியாவுக்கு மறைமுக அச்சுறுத்தல்

சீனாவின் உளவுக் கப்பலுக்கு மாலத்தீவு வரவேற்பு தெரிவித்திருப்பது, இந்தியாவுக்கான மறைமுக அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சீனாவின் உளவுக் கப்பல்களில் ஒன்று ஜியான் யாங் ஹாங் 03. ராணுவ நோக்கங்களுக்காக இந்தியாவின் கடற்பரப்புகளில் உலா வரும் சீனாவின் உளவு கப்பல்களின் வரிசையில், புதிய வருகையாக இந்த கப்பல் சேர்ந்துள்ளது. பிப்ரவரி முதல்வாரத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலே நிறுத்தப்பட உள்ள இந்த உளவுக் கப்பலும், இந்தியா அருகே அது மேற்கொள்ளவிருக்கும் ராணுவ ஆராய்ச்சிகளும், இந்தியாவுக்கான பெரும் அச்சுறுத்தலாக மாற உள்ளது.

சீனாவுக்கு ஆதரவு – இந்தியாவுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாடுடன் மாலத்தீவில் அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான ஆட்சி அண்மையில் அமைந்தது. அது முதல் இந்தியாவை சீண்டும் நடவடிக்கைகளில் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் இந்தியர்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களை வெளியிட்டதில், மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

இந்தியர்கள் முற்றிலுமாக மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணித்துள்ளனர். மாலத்தீவின் பிரதான வருமானமான சுற்றுலா நொடித்ததில், மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு பயணித்து சுற்றுலா பயணிகளை அதிகம் அனுப்புமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் சீனாவோ உளவுக் கப்பலை அனுப்பி வைக்கிறது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் என்று அறிந்தும் மாலத்தீவு, சீனாவின் உளவுக்கப்பலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ’ஆராய்ச்சி நோக்க’த்துடன் வருகை தரும் நட்பு நாடுகளின் கப்பல்களை வரவேற்பதாக மாலத்தீவு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இரு நாட்டு உறவை மேம்படுத்தும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மாலத்தீவு கடற்பரப்பில் சீனாவின் உளவுக் கப்பல் எந்தவொரு ஆராய்ச்சியையும் நடத்தாது என்ற நம்பிக்கையும் மாலத்தீவு தெரிவித்திருக்கிறது.

4,300 டன் கொண்ட சீனாவின் உளவுக் கப்பல் இந்தியப் பெருங்கடலின் பரப்பு நெடுக ‘ஆராய்ச்சி’ மேற்கொள்ள வருகிறது. இந்த ஆய்வுகள் நீரடி நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் தொடர்பானவை என சீனா தெரிவிக்கிறது. உண்மையில் சீன உளவுக் கப்பலின் ஆய்வுகள் ராணுவ ரீதியிலானவை. போர் எழுந்தால் எதிரி நாட்டுக்கு எதிராக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு சீனாவின் இந்த ஆய்வு உதவும். ஒட்டுமொத்தமாய் சீனாவின் இந்த ஆய்வும், உளவுக் கப்பல் உலாவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது.

Exit mobile version