Site icon Tamil News

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றி! கந்தையா சிவநேசன்

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம் வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

ஏனென்றால் இது நீண்டகால பிரச்சினை சமாதானத்திற்கான ஒரு வழக்காகவே இது ஆரம்பத்தில் போடப்பட்டது .

ஆனால் சமாதானத்தை மீறி நடந்த நிகழ்வுகள் தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் இந்த தீர்ப்பானது ஒரு ஆரம்ப படியாகவே கருதமுடியும். இதிலே இரண்டு விடயங்கள் ஒன்று திணைக்களங்கள் யாவும் சார்பு நிலையில் இருக்கின்றது.

மற்றையது அமுலாக்கல் பிரிவுகள் சார்பாக நடந்து கொள்கின்றது என்பது இந்த தீர்ப்பிலே புலப்படுகின்றது.

ஆகவே இந்த தீர்ப்பு என்பது ஆரம்ப நிலையாக இருந்தாலும் தொடர்ந்து நாம் பல படிகளாக செல்ல வேண்டி இருக்கின்றது. இந்த தீர்ப்புக்கு எந்தளவு முக்கியத்துவம் இந்த நாட்டின் பேரினவாதம் கொடுக்கின்றது என்பதனையும் நாங்கள் எதிர்காலத்தில் அவதானிக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல இதனை ஒரு முன் உதாரணமாக உலக நாடுகளும், இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஒரு விடயமாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நிச்சயமாக ஒவ்வொருவரும் அவர்கள் எதற்காக உழைத்தவர்கள் இப்பிரதேச மக்கள், கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டமை இந்த வெற்றிக்கு ஒரு காரணமாக நான் கருதுகின்றேன்.

அத்தோடு இப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தங்களது நீதிக்காக குரல் கொடுத்ததை காணமுடிந்தது. ஆகவே இந்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியாக நான் கருதுகின்றேன் என்றார்.

Exit mobile version