Tamil News

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கென்யா… 38 பேர் பலி!

கென்யாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் தலைநகர் நைரோபி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் வானிலையில் பெரும் மாற்றங்கள் நிலவி வருகிறது. துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பேய் மழை கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெப்ப மண்டலமான ஆப்பிரிக்காவில் அவ்வப்போது மட்டுமே மழை பொழியும் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருகிறது. இந்தியா போன்ற மித வெட்ப நாடுகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வானிலை மாற்றங்களால் மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.

Deadly floods kill 38 in Kenya, destroy farmlands, property

இந்த நிலையில், கென்யாவில் உள்ள பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழைப்பொழிவு இருந்து வருகிறது. சில மணி நேரங்களில் பல சென்டிமீட்டர் அளவிலான மழை கொட்டித் தீர்ப்பதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கென்யா நாட்டின் 23 மாகாணங்களில் தற்போது இது போன்ற பெருமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கென்யா தலைநகர் நைரோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் தொடங்கி இரவு முழுவதும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக, தாழ்வான இடங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

தலைநகர் நைரோபி மற்றும் அருகில் உள்ள கிட்டெங்களா நகரங்கள் இடையேயான முக்கிய பாலம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பணிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாக, இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 1 லட்த்து 10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் கலக்கம் நிலவி வருகிறது.

Exit mobile version