Site icon Tamil News

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்த கமல்ஹாசன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைப் பிரபல தமிழ்த் திரையுலக நடிகர் கமல்ஹாசன் ஜூன் 28ஆம் திகதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்துப் பேசினார்.

கூடிய விரைவில் வெளிவர இருக்கும் தமது ‘இந்தியன் 2’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் கமல்ஹாசன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“அதிகாரபூர்வப் பணிகளுக்கு இடையே எனக்குக் கிடைத்த ஓய்வுநேரத்தின்போது உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரையுலக நட்சத்திரமான கமல்ஹாசனைச் சந்தித்து, அவருடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

“கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பேசினோம். திரையுலகம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். குறிப்பாக, ஊழலுக்கு எதிரான எங்களது நிலைப்பாடு குறித்து கலந்துரையாடினோம்,” என்று பிரதமர் அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 1996ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி கண்டது. தற்போது ‘இந்தியன் 2’ வெளிவர உள்ளது. இதிலும் 69 வயது கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இத்திரைப்படங்கள் ஊழலால் சமுதாயத்திற்கு ஏற்படும் சீர்கேடுகளை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 29ஆம் திகதியன்று ‘இந்தியன் 2’ திரைப்படம் தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்திலும் ரசிகர்களைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியிலும் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version