Site icon Tamil News

எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு யாராவது அழுத்தம் கொடுத்திருந்தால் அரசாங்கத்தை குறைகூறுவதை விடுத்து அது தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

நீதித்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. வசதிகளை வழங்குதல் மற்றும் சட்டங்களை இயற்றும் வேலையைத் தான் அரசாங்கம் செய்கிறது என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை மாற்றுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல கூறிய போதே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அறிவித்ததாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அவர் நட்டை விட்டுச் சென்ற பின் முறைப்பாடு செய்திருக்கலாகாது. அரசியலமைப்பின் பிரகாரம், தன்னை அச்சுறுத்திய நபருக்கு அழைப்பாணை விடுத்து அவரை மன்றுக்கு முன் ஆஜராக செய்யவும் அல்லது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.மேலும் குறித்த நபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அவரைத் தண்டிக்கவோ இல்லாவிட்டால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்க முடியும்.

தனது அதிகாரங்களை அவர் பயன்படுத்தாவிட்டால் அதற்கு அவர் தான் பொறுப்புக்கூற வேண்டும்” என நீதியமைச்சர் தெரிவித்தார்.நீதிபதி சம்பந்தமான விவகாரத்தில் தலையிட அரசாங்கத்திற்கு எதுவித அதிகாரமும் இல்லை. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கே இதைக் கையாளும் அதிகாரம் உள்ளது. இது தொடர்பில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் என அமைச்சர் விஜயதாஸ தெரிவித்தார்.

Exit mobile version