Site icon Tamil News

யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களது மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று(24) யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

2017ம் ஆண்டு யூலை 22ம் திகதி நல்லூர் சந்தியில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஓருவர் சுட்டுச்க் கொல்லப்பட்டதுடன் மற்றைய பாதுகாவலர் படுகாயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர். சாட்சிகள் நெறிப்படுத்தலில் முதலாவது கண்கண்ட சாட்சியாளரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சாட்சியமளித்தார்.

சாட்சியினை அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்தன் நெறிப்படுத்தினார். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சர்மினி பிரதீபன் சாட்சியை குறுக்கீடு செய்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் தற்போது வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாகவுமுள்ள நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சம்பவம் இடம்பெற்ற 2017ம் ஆண்டு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் நீதிபதியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்தக் காலப் பகுதியிலேயே தன்மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று மா. இளஞ்செழியன் சாட்சியத்தின் போது தெரிவித்தார்.

இதன்போதே தனது மெய்ப்பாதுகாவலர் எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியாளரான மா.இளஞ்செழியன் அடையாளம் காண்பித்தார்.

தொடர்ந்து இரண்டாவது கண்கண்ட சாட்சியாளரான நீதிபதியின் பொலிஸ் மெய்ப் பாதுகாவலரும் எதிரயின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரும் சாட்சியமளித்தார்.

இரண்டாவது சாட்சியின் சாட்சியத்தை மேல் நீதிமன்ற நீதிபதி D.S.சூசைதாஸன் நாளை (25) வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். குறித்த வழக்கு நாளை (25) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version