Site icon Tamil News

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய நாளேடுகளின் செய்தியாளர்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நாளேடுகள் சிலவற்றின் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர்.

ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கியிருக்கும் வேளையில் செய்தியாளர்கள் ஊதியப் பிரச்சினை தொடர்பில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ‘த ஏஜ்’, ‘ஆஸ்திரேலியன் ஃபினான்சிஷியல் ரிவியு’ உள்ளிட்ட நாளேடுகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

‘நைன் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற ஒரே நிறுவனத்தின்கீழ் செயல்படும் நாளேடுகளின் ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள், சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்லவில்லை.பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ள விளையாட்டுச் செய்தியாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

‘நைன்’ நிறுவனம், ஒளிபரப்பு உரிமைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்(S$268 மில்லியன்) செலுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

“ஆஸ்திரேலிய பொதுமக்கள், உடனுக்குடன் தகவல்களை அறியவும் ஊழல் மற்றும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் செய்தியாளர்களை நம்பியிருக்கின்றனர். ஆனால் நிரந்தர, பாதுகாப்பான வேலை இல்லாமல் அவற்றை அவர்களால் செய்ய முடியாது,” என்று செய்தியாளர் சங்கத்தைப் பிரதிநிதித்துப் பேசிய மிஷல் ரே கூறினார்.

மெல்பர்னில் உள்ள ‘த ஏஜ்’ அலுவலகத்துக்கு வெளியே இருந்த செய்தியாளர்கள், ‘செய்தித் துறையை எரிக்காதீர்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட டீ சட்டையை அணிந்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரச்சினை நீடிக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் செய்தித் துறையில் 90க்கு மேற்பட்ட ஆட்குறைப்புகளை செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்ததால் பதற்றம் கூடியிருக்கிறது.

“குறைவான சம்பள உயர்வு அல்லது வேலை நீக்கம், இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் கூறுகிறது. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று திருவாட்டி ரே கூறினார்.

உலகெங்கிலும் உள்ள பல செய்தி அறைகளைப் போலவே, செய்தித் தாள் வருவாய் வீழ்ச்சியும் சமூக ஊடகங்களின் எழுச்சியும் ஆஸ்திரேலியாவின் செய்தித் துறையில் ஆட்குறைப்புக்கு வழி வகுத்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதிவிலக்கல்ல

Exit mobile version