Tamil News

சிறைக்கு போன வேகத்திலேயே திரும்பிய ஜெயலட்சுமி…

கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த 20ம் தேதி அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயலட்சமி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நடிகை ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ஜெயலட்சுமிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த நடிகை ஜெயலட்சுமி தனது எக்ஸ் தளத்தில்: நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும்’ என்றும், ‘தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி’ எனவும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version