Site icon Tamil News

தாய்லாந்தில் ஆளுங்கூட்டணியுடன் கைகோக்கும் பழைமையான அரசியல் கட்சி

தாய்லாந்தின் ஆகப் பழைமையான அரசியல் கட்சியான ஜனநாயகக் கட்சி, முன்னாள் பியூ தாய் கட்சித் தலைமையிலான ஆளுங்கட்சிக் கூட்டணியுடன் கைகோக்கவிருக்கிறது.

தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் அமைச்சரவையை இறுதிசெய்து வருகிறார்.இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சலெர்ம்சாய் ஸ்ரீ ஆனும் பொதுச் செயலாளர் தேஜ் இஸ் கவோதோங்கும் அமைச்சர்களாக இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கூட்டணிக்கு ஆதரவளிப்பர். இதனையடுத்து, மொத்தம் 500 உறுப்பினர்களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கூட்டணிக்கு ஏறத்தாழ 300 பேரின் ஆதரவு இருக்கிறது.

ஜனநாயகக் கூட்டணி, ஆளுங்கூட்டணியுடன் கைகோத்து இருப்பதன்மூலம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக நீடித்துவந்த அரசியல் பகைமை முடிவிற்கு வருகிறது.

இப்போதைய பிரதமர் பேடோங்டார்னின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தக்‌சின் ஷினவாத்துடன் இணைத்துக் கூறப்பட்ட பல்வேறு கட்சிகளை ஜனநாயகக் கட்சி எதிர்த்து வந்தது.

இருதரப்பு ஆதரவாளர்களும் சாலைகளில் இறங்கிப் போராடினர். சில வேளைகளில் அவர்கள், அதிகாரிகளுடன் மோதிக்கொண்டதில் உயிரிழப்புகளும் பதிவாயின.

தாய்லாந்துப் பிரதமராக இருந்துவந்த ஸ்ரெத்தா தவிசின் விதிமீறல் காரணமாக நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, இம்மாதம் 16ஆம் திகதி பேடோங்டார்ன் தாய்லாந்து பிரதமராகப் பதவியேற்றார்.

Exit mobile version