Site icon Tamil News

காசாவில் உள்ள இரு பள்ளிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!

காசா பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தன , 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தாக்குதலில் பள்ளி வளாகத்தில் இருந்த பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்ததாகவும், அந்த பள்ளிகளில் பாலஸ்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளிகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படுவதாகவும், அதன் காரணமாகவே, அவற்றை குறிவைத்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கல்வி நிறுவனங்களில் இருந்தவாறு தாங்கள் செயல்படுவதில்லை எனக்கூறி இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதோடு, கடந்த ஆண்டு போர் தொடங்கியது முதல், இதுவரை பள்ளிகள் உட்பட 172 பொது நிறுவனங்களின் கட்டுமானங்கள் இஸ்ரேல் படைகளால் தகர்க்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39, 583 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 118 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 91, 398 பேர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version