Tamil News

ராஃபாவில் அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல்; ஐ.நா கடும் கண்டனம்

ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்தத் தாக்குதல் காஸா நேரப்படி மே 26ஆம் திகதி இரவு நிகழ்ந்துள்ளது.

தாக்குதலின் விளைவாக அங்கு அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்கள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன.சடலங்களுக்குப் பக்கத்தில் பாலஸ்தீனப் பெண்களும் ஆண்களும் கதறி அழும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டன.

இறத்மவர்களில் பலர் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மிக மோசமான தீக்காயங்கள் காரணமாகப் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தூங்குவதற்காக குடும்பங்கள் கூடாரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர்பிழைத்தோர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

திடீரென்று ஏற்பட்ட வெடிப்பு, முகாமில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் அகதிகள் முகாமில் இருந்த சிறுவர்களின் அலறல் சத்தம் மனதைப் பதற வைத்ததாகவும் அவர்கள் கூறினர்..

இஸ்ரேல் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Exit mobile version