Site icon Tamil News

காசாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் புரிந்துள்ளது; ஐநா அறிக்கை

இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரண்டும் காஸா போரின் ஆரம்பக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் புரிந்தன என விசாரணையில் கண்டறிந்ததாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 12ஆம் திகதி புதன்கிழமை தெரிவித்தது.

காஸா போரில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதால் அந்நாடு போரின்போது எடுத்த முடிவுகள் அனைத்தும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என ஐ.நா மேலும் கூறியது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களையும் அதற்குப் பதிலடி தரும் வகையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலையும் மையமாக வைத்து ஐ. நா விசாரணை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலிருந்து மேற்கூறியவற்றை ஐ.நா கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இது வழக்கத்திற்கு மாறாக இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன வட்டாரங்களிலும் நடந்த அனைத்துலக குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிரான சாட்சியங்களைச் சேகரிக்கும் ஆணையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை என்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு சார்புடைய விசாரணை இது என்றும் அந்நாடு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

ஐ.நாவின் விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து ஹமாஸ் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை என அது தெரிவித்தது.

Exit mobile version