Site icon Tamil News

சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பது அவசியமா? ஆராய்ச்சியாளர்கள் கூறும் அட்வைஸ்

கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில், நிறுவன அறிவியல் துறையில் பணிபுரியும் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான ஸ்டீபன் ஃபிரைட்மேன், பணியிடங்களில் ஊழியர்கள் இடையிலான உறவுகள், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர், பணியிடங்களில் ஊழியர்கள் இடையிலான நட்புறவு, ஊழியர்களின் செயல்திறனை எவ்வாறு அதிகரிக்கிறது? என்பது குறித்து விவரித்துள்ளார்.

ஸ்டீபன் ஃபிரைட்மேன் கூறுகையில், “எனது இருபதுகளில் நான் டொரான்டோவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்தேன். அப்போது, சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பது பற்றி அதிகம் சிந்தித்தது இல்லை.

நான் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக ஆனவுடன்தான் பணியிட உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஒரு ஊழியர் சக ஊழியர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தால் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது நிறுவன அறிவியல் தொடர்பாக ஆய்வுகளும் செய்து வருகிறேன். இந்த ஆய்வுகளில் பணியிட நட்புத் தொடர்பாக பல கண்ணோட்டங்கள் மற்றம் வகைப்பாடுகள் உள்ளன.

பணியிட நட்பு வகைகள்:வட அமெரிக்கர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தங்களுக்குப் பணியிடத்தில் சிறந்த நண்பர் இருப்பதாகக் கூறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் பணியிடத்தில் வழக்கமான சாதாரணமான நண்பர்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

அனைத்து பணியிட நட்புறவுகளும் ஒரே விதமான நன்மைகளையும், சலுகைகளையும் வழங்குவதில்லை.அதனால், அவற்றின் தன்மைகளை வைத்து வகைப்படுத்தலாம்.

பணியிட நட்பைப் பற்றிய முந்தைய உளவியல் ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தியும், ஆயிரக்கணக்கான நிறுவன மேலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தை வைத்தும், பணியிட நட்பை நான்காக வகைப்படுத்தியுள்ளேன்.

பணியிட சிறந்த நட்பு:இந்த வகையின்படி, பணியிடத்தில் சிறந்த நண்பர்களாக இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் உயர்வாக கருதுவார்கள். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நேர்மையாகவும் நடப்பார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் பகிர்ந்து கொள்வார்கள்.

பணியிட நெருங்கிய நட்பு:இந்த வகை நட்பில் இருப்பவர்கள், தனிப்பட்ட வாழ்க்கை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சிறந்த நண்பர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால், நெருங்கிய நட்பில் இருப்பார்கள். குறிப்பிட்ட பணியை விட்டுச் சென்றாலும் கூட, அவர்களுடன் தொடர்ந்து நட்பில் இருக்க விரும்புவார்கள்.

பணியிட நட்பு:இந்த வகை நட்பு உறவில் மேலே குறிப்பிட்டுள்ள அதே குணங்கள் இருக்கும். ஆனால், பணியிடத்தை கடந்து நிலைத்திருக்க வாய்ப்பு குறைவு. எளிமையாக கூறினால், இந்த வகை நட்பு என்பது, வழக்கமாக பணியிடங்களில் ஒன்றாக சாப்பிடச் செல்வது, தேநீர் குடிக்கச் செல்வது என வேலை சார்ந்த மட்டத்திலேயே இருக்கும்.

பரிச்சயமான உறவு: இந்த வகையில், பணியிடத்தில் உள்ள ஒருவர் சக ஊழியரை அடிக்கடி பார்ப்பார். ஆனால், அதிகளவில் பழகி இருக்க மாட்டார்கள். பார்க்கும்போது புன்னகைப்பது, வணக்கம் சொல்வது அந்த அளவில் மட்டும் நட்பு இருக்கும்.

பணியிட நட்பின் பலன்கள்:பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பது பணியில் மேம்பாட்டையும், உளவியல் ரீதியான பாதுகாப்பு உணர்வையும், புரிதலையும் வழங்கும். அதேபோல், பணியிடத்திற்கு ஏற்ற தகவமைப்பையும், பணிவையும் ஊக்குவிக்கிறது.

நவீன நிறுவனக் கோட்பாட்டாளரான எல்டன் மாயோ(Elton Mayo), பணியிடத்தில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஊழியர்களின் செயல்திறனுக்கு முக்கியமானவை என்று கூறுகிறார்.

ஒருவருடன் சாதாரணமாக கருத்துகளைப் பகிர்வது இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தாது. ஒருவரது உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவர் குறித்து அக்கறை கொள்ளும்போது இந்த பிணைப்பு ஏற்படும்.

அதேநேரம் இதுபோன்ற பிணைப்பு பணியிடங்களில் சிலருக்கு கடினமானதாக இருக்கலாம். காரணம், இந்தப் பிணைப்பிற்கு நேரம் செலவிட வேண்டும். நம்பகத்தன்மையைப் பராமரிக்க வேண்டும்.

பணியிடத்தில் எந்த வகை நட்புறவு பயனுள்ளது?கரோனா காலத்திற்குப் பிறகு பணியிடத்தில் நண்பர்களை வைத்துக் கொள்வது என்பது முக்கியமானதாக மாறிவிட்டது.

வீடுகளில் இருந்து பணிபுரிவது போன்ற கலாசாரங்கள் அதிகரித்த சூழலில், இதுபோன்ற பணியிட நட்பு சமூக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவு அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஊழியர்களிடையே மகிழ்ச்சி, செயல்திறன் அதிகரிப்பு, வேலையில் உந்துதல் போன்றவற்றையும் வழங்குகிறது.

மேற்கண்ட நான்கு வகைகளில், பணியிடத்தில் சிறந்த நட்பைப் பராமரிப்பது சற்று கடினமாக இருக்கலாம், அது சோர்வை ஏற்படுத்தலாம். பணியிட நெருங்கிய நட்பு மற்றும் பணியிட நட்பு உணர்வு ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் மற்ற பலன்களை வழங்கும்.

அதனைப் பராமரிப்பது கடினமாக இருக்காது.பணியிட நெருங்கிய நட்பு வகையில், தனிப்பட்ட பிரச்னைகள் வேலையில் எதிரொலிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பரிச்சயமான உறவு, எந்தவித பலனையும் தராது. பணியிடத்தில் அதிக பலன்களைப் பெற விரும்பினால், அதற்கு ஏற்றார்போல் நட்புறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பணியிடத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது, மாறாக தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற தனிமை உங்களை நோய்வாய்ப்படுத்தலாம்.

பிடிக்காத சக ஊழியருடன் எப்படி நட்பாக இருப்பது?பணியிடத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது பயனற்றதுதான். ஆனால், பணியிடத்தில் நமக்குப் பிடிக்காத சக ஊழியருடன் எப்படி நட்பாக இருப்பது? – இதுபோன்ற சூழ்நிலையில் நமது பார்வையை மாற்றலாம்.

அவர் மீதான எதிர்மறையான பார்வையை மாற்றிவிட்டு, அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.பிடிக்காத விஷயங்களை தவிர்க்கலாம். ஒரு புத்தகத்தில் நமக்குப் பிடிக்காத சில பகுதிகளுக்காக மொத்த புத்தகத்தையும் நாம் நிராகரிப்பது இல்லை.

அதுபோலவே, பிடிக்காத சக ஊழியரிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களை விட்டுவிடலாம்.

அதேபோல், பணியிடத்திலோ அல்லது வெளியிலோ யாரும் பெர்ஃபெக்ட் கிடையாது, அதாவது மிகவும் சரியானவர்கள் என்று கிடையாது.

இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல நமது சிந்தனைகளை சிறிது மாற்றினாலேயே, பணியிடத்தில் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம்” என்று கூறினார்.

Exit mobile version