Site icon Tamil News

மீண்டும் காயம்.. பாதியிலேயே விட்டு வெளியேறிய கேன் வில்லியம்சன்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தன.

இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் காயம் அடைந்துள்ளார். அவர் இல்லாத நிலையில், டிம் சவுத்தி நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்தார். 10-வது ஓவரில் ஒரு ரன் எடுக்கும்போது, ​​வில்லியம்சன் தொடை தசையில் பிடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறிது நேரம் ஆடுகளத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்த பிசியோ மருத்துவர் காயத்துடன் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, வில்லியம்சன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

கடந்த ஐபிஎல் 2023 இன் முதல் போட்டியிலேயே வில்லியம்சன் முழங்கால் தசைநார் உடைந்தது. இதன் பிறகு அவர் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், 2023 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே அவர் முழுமையாக குணமடைந்தார்.

இருப்பினும் உலகக் கோப்பையில் கூட வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு கட்டைவிரல் முறிந்தது. இதற்குப் பிறகு அவர் நான்கு போட்டிகளில் விளையாடவில்லை. இதைதொடர்ந்து, டிசம்பரில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய டி20 போட்டியில் கூட காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version