Site icon Tamil News

3வது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், விராட் கோலி பெயர் இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாக, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக எஞ்சிய தொடர்களில் விளையாடும் அணி குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்தது. விராட் கோலியின் வருகை, காயத்தில் இருக்கும் ராகுல், ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்துவிட்டு இன்று இந்திய அணியை அறிவித்துள்ளது.

அதன்படி கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்ததையடுத்து அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் பயிற்சி அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கபட்டுள்ளனர். இருப்பினும் அவர்களது உடல்நிலையை பொறுத்து அணியில் சேர்க்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இளம் வீரர்கள் ஆகாஷ் தீப், சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் தொடர்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் முகேஷ்குமார், சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளனர். ரஜத் படிதாருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. .

இங்கிலாந்து எதிரான கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (சி), ஜஸ்பிரித் பும்ரா (விசி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல்*, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் விவரம்:

மூன்றாவது டெஸ்ட் பிப்ரவரி 15, 2024 அன்று ராஜ்கோட்டில் தொடங்குகிறது. நான்காவது டெஸ்ட் பிப்ரவரி 23, 2024 முதல் ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 07, 2024 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும்.

Exit mobile version