Site icon Tamil News

இந்தியா – நடுவானில் உடல்நலம் குன்றிய பெண் மரணம்; அவச்சரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சிறுநீரக சிகிச்சைக்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பதின்ம வயது பெண் ஒருவருக்கு நடுவானில் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து, விமானத்தில் உயிரிழந்தார்.அதையடுத்து கோல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்ட ஈராக்கி ஏர்வேஸ் விமானம், அங்கு அவசரமாகத் தரையிறங்கியது.

அந்தப் பெண்ணிடம் நாடித்துடிப்பையோ இதயத்துடிப்பையோ மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்ட அப்பெண், இறந்துவிட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது.

ஈராக்கைச் சேர்ந்த டெக்கன் அகமது, 16, எனும் அப்பெண்ணுடன் அவருடைய பெற்றோரும் சீனாவின் குவாங்ஸோ நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

கோல்கத்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அரை மணி நேரம் கடந்த நிலையில், விமான நிலையப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட விமானி, அவசரமாக விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினார்.

“இரவு 10.12 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமான நிலையச் சுகாதார அதிகாரி ஒருவர் அப்பயணிக்கு உதவினார்,” என்றார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.

அப்பெண் கொண்டுசெல்லப்பட்ட மருத்துவமனையில் அதிகாரிகள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். துக்கத்தில் இருந்த அப்பெண்ணின் குடும்பத்தார் ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய காவல்துறையினர் உதவினர்.பின்னர், அப்பெண்ணின் உடல் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு வியாழக்கிழமை உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், அப்பெண்ணின் உடல் வெள்ளிக்கிழமை டெல்லி வழியாக ஈராக் தலைநகர் பாக்தாத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version