Site icon Tamil News

சமந்தா பவர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாக அதிகாரி  சமந்தா பவருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (19.09)  இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்காக  சமந்தா பவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுருக்கமாக  விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் கூறியுள்ளார்.

ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முறைப்படி பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்கும் சவாலை ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனைக் கருத்திற்கொண்டு, ஊழல் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எதிர்பார்த்த பலன்களைப் பெற இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் முழு அரசாங்க இயந்திரமும் ஊழலுக்கு எதிரான கொள்கையை அமுல்படுத்துவதற்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த செயற்பாடுகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு  சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அஸ்வசும” சமூக நலன்புரி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதில், சமூக நலத்திட்டங்களின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது எடுத்துக் கூறியுள்ளார்.

 

Exit mobile version