Site icon Tamil News

இலங்கையில் சாதாரண தரப்பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை நிகழ்நிலையில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரச பாடசாலை அல்லது அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலையிலிருந்து விலகி விடுகைப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

இவ்வாண்டு தொடக்கம் O/L பரீட்சைக்காக விண்ணப்பிக்கவிருக்கும் சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளிடமும் தேசிய அடையாள அட்டை இருப்பது கட்டாயமானதாகும். தேசிய அட்டை இல்லாத 15 வயதுக்கு குறைவாக உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் O/L பரீட்சைக்காக தோற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பின் அவர்கள் பரீட்சைத் திணைக்களத்துக்கு வருகைத் தருவது கட்டாயமானதாகும்.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றுக்குள் நுழைந்து உரிய அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய பிழையின்றி விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியைப் தெவையேற்படுமிடத்து சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். பாடசாலை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டிய பயனர் சொல் (User Name), கடவுச் சொல்(Password) என்பன பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 பெப்ரவரி 15ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. அத்தினம் நள்ளிரவு 12.00 மணிக்க பின்னர் நிகழ்நிலை முறைமை நிறுத்திவைக்கப்படும். எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்ப முடிவுத்திகதி நீட்டிக்கப்படமாட்டாது என்பதை கவனத்திற்கொள்ளவும். எனவே விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.

Exit mobile version