Site icon Tamil News

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா? து.ரவிகரன்

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் இந்த புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

”பெற்றோர்கள் இறுதியாக ஒப்படைத்த சிறுவர்கள் இன்றுவரை காணாமலாக்கப்பட்ட நிலையில் அவர்களை தேடி நாளாந்தம் வீதிகளிலே இருந்து தங்களுடைய உறவுகளுக்காக 2000 நாட்களை கடந்த நிலையில் போராடி கொண்டிருக்கிறார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது சங்கத்தினால் ஒப்படைத்த உறவுகளை தேடி ஒவ்வொரு தினங்களிலும் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு தேவையென பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது நீதிபதியினுடைய விவகாரம் வந்திருக்கிறது.

நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அந்த நீதித்துறையையே ஆட்டம் காண செய்யுமளவிற்கு அரசியல் ரீதியாக அரசாங்க தரப்புக்கள் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் பல வகையில் துன்புறுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாடு விட்டு நாடு சென்றுள்ளார்.

கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரம் நடைபெறுகிறது. புதைகுழி கூட மூடி மறைக்கப்படுமோ என்ற அச்சம் இருந்து கொண்டிருக்கின்றது. பல திணைக்களங்கள் சேர்ந்து அகழப்படும் அகழ்வில் நீதி கிடைக்குமா? நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் இந்த புதைகுழிக்கான நீதி கிடைக்குமா? எதிர்வரும் 30 ஆம் திகதி அடுத்த அகழ்வு என கூறப்பட்டது.

அந்த அகழ்விலும் இந்த நீதியை எதிர் பார்க்கலாமா? என்ற கேள்வி எழுகின்றது. என்னிடம் மட்டுமல்ல மக்களிடமும் எழுகின்றது” என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version