Site icon Tamil News

பிரித்தானியாவிற்கு மனித கடத்தல்! இலங்கை விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

17 வயது சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து சிறுவர் கடத்தல் மோசடி முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைப் பெண்ணும் அவரது மகனும் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில் போலியான ஆவணங்களைத் தயாரித்து சிறுவனை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 ஊடாக லண்டன் செல்வதற்காக முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர், குறித்த இளைஞனுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த பெண் விமான சேவைக்கான ஆவணங்களை வழங்கியிருந்த நிலையில், குறித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அந்த ஆவணங்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ததில் அவை போலியானது என உறுதி செய்யப்பட்டது.

பின்னர், சிறுவனிடம் விசாரித்ததில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் தனது உண்மையான தாய் காத்திருப்பதாக சிறுவன் மேலும் கூறியுள்ளான்.

அதன்படி, திணைக்களத்தினர் அந்த பெண்ணையும் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் சந்தேகநபர்களை ஒப்படைத்துள்ளனர்.

Exit mobile version