Tamil News

உதயநிதியால் தப்பினாரா யூடியூபர் இர்பான்? முன்னாள் அமைச்சர் அதிரடி

தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டு யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு வீடியோவை டெலிட் செய்தார்.

அவர் மீது இன்னும் நடவடிக்கை பாயாத நிலையில் உதயநிதியின் நண்பருக்கு எல்லாம் சட்டம் பொருந்தாது. அவர் மீது நடவடிக்கை பாயாது என அதிமுகவின் முன்னாள் அமைசசர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தெரிவிப்பது சட்டப்படி குற்றம். இதை மீறி செய்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை என்பது எடுக்கப்படும்.

இந்நிலையில் தான் யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் துபாய் சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டார். அதன்பிறகு தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளியுலகிற்கு தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சியை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டார்

இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அவர் முன்கூட்டியே அறிந்து தெரிவித்தது தான் சர்ச்சைக்கு காரணமாகும். இதையடுத்து சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையை தொடர்ந்து இர்பான் மன்னிப்பு கோரினார். மேலும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை டெலிட் செய்தார். இதற்கிடையே தான் மன்னிப்பு கேட்டதால் இன்னும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து யூடியூபர் இர்பான் அறிவித்துள்ளார். அவர் பிரபலமானவர் என்பதால் இப்போது மன்னிப்பு கேட்டதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறத. ஆனால் சாமானியனாக இருந்தால் இப்படி விடுவார்களா? ” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார், ‛‛நீங்களே சொல்லிவிட்டீர்கள் அல்லவா. யூடியூப்பில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். உதயநிதிக்கு, இர்பான் எவ்வளவு நெருக்கம் என்பதை பார்த்து இருப்பீர்கள். காரில் 2 பேரும் சிரித்து கொண்டு கை கொடுத்து கொண்டு சிரித்தபடி ஜாலியாக போய் இருப்பார்கள். அவர்கள் நண்பர்கள். அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள். அவர்கள் சார்ந்த கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்தால் சட்டம் என்பது பொருந்தாது.

ஆனால் நீங்கள் யூடியூப்பில் ஏதாவது இப்படி பதிவு செய்தால் உடனே கைது செய்யப்படுவீர்கள். உங்களுக்கு ஜாமீன் கிடைக்காது. வழக்கு மீது வழக்கு போடுவார்கள். அதன்பிறகு குண்டர் சட்டம் பாயும். இதனை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களை பொறுத்தமட்டில் அவர்களுடன் இருப்பவர்களுக்கு சட்டமே கிடையாது” என விமர்சனம் செய்துள்ளார்.

Exit mobile version